துரோகம் செய்து
முதுகில் குத்தும்
வேலை செய்பவன் அவன்
அதற்காகவே மெனக்கெடும்
அவன் மூளைக்குள்
சூழ்ச்சிக் கூவம் வற்றுவதேயில்லை
குப்புறத் தள்ளுவதிலும்
குழி பறிப்பதிலும்
உலக சாதனையாளன்
என்பதை விடவும்
மகா நடிப்பு சுதேசி
நம்பிக்கை
கொலை செய்யும்
இடியாப்பச் சிக்கலே அவன்
எப்போதும்
சகுனி விடியல்தான்
அவனுக்கு
அமரர் ஊர்வலங்களே
பாயசம்
நீலப் படத்தின் சுவாரஸ்யத்தோடு
பாடையைப் பார்ப்பவன்
துரோகப் பொழுதில்
மனைவியின் விரலை
நீவியிருக்கலாம்
மகளின் கேசத்தைக்
கோதியிருக்கலாம்
குடும்பத்தின் புன்னகைக்கு
ஒரு செடியாவது
நட்டிருக்கலாம்
இப்போது
அவன் வீட்டு நிலைவாசலாகி நிற்கிறது
தர்மத்தின்
ரௌத்திர சாபம்
எப்போதும் மிச்சமிருக்கும்
சுவாசக் காற்றும்
-ஆண்டாள் பிரியதர்ஷினி