day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை தீர்வாகுமா?

பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை தீர்வாகுமா?

பெண்களுக்கெதிரான குற்றங்கள் மிகவும் ஈனமானதும் மிருகத்தனமானதுமாகும். அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் சமூகம் மோசமான நிலையில் தான் காண்கிறது. இருப்பினும் இத்தகைய குற்றங்கள் சமீப காலமாக மிகவும் அதிக அளவில் நடைபெறுகிறது. உலகளவில் நோக்கும்போது இத்தகைய குற்றங்கள் அதிகரித்துள்ளன . குறிப்பாகத் தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் இக்குற்றங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தினந்தினம் செய்தித்தாள்களில் இத்தகைய குற்றங்கள் முதல் பக்கச் செய்தியாக வெளியாவதிலிருந்து இதன் தீவிரத்தை நம்மால் உணர முடிகிறது.
அமெரிக்காவில் 2010இல் நடத்திய ஆய்வில் 12.7 லட்சம் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது 29 வினாடிக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள். சுமார் 51 லட்சம், அதாவது 7 வினாடிக்கு ஒரு பெண் வன்கொடுமைகளுக்கு (Sexual Harassment) ஆளாக்கப்படுகிறாள் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
தேசிய குற்ற ஆவணப்பக்கம் இந்தியாவில் குற்றங்கள் -2019 என்ற ஆய்வு அறிக்கையை செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதின்படி கடந்த 2017 இல் 32,559 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி இருந்தது. 2018 ஆம் ஆண்டு 33,359 ஆக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் நாடு முழுதும் 78,236 வழக்குகள் 2018இல் பதிவு செய்யப்பட்டுள்ளது . 2019 இல் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 4,05,861 ஆக உயர்ந்துள்ளது. இது 2018-ஐக் காட்டிலும் 7.3 சதவீதம் அதிகமாகும். சராசரியாக ஒரு நாளைக்கு 87 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின.
கடந்த 2018-ஐக் காட்டிலும் 2019 இல் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றச்சம்பவங்களின் விகிதம் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019 இல் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் 1.48 லட்சம் வழக்குகள் பதிவாகின .
அசோசெம் நடத்திய மேலும் ஓர் ஆய்வு, இந்தியாவில் 40 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள், 25 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுகிறாள் என்றும் கூறுகிறது. ஆய்வில் பங்குகொண்ட மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தாங்கள் பல விதமான Eve-teasingக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தில்லியில் பெண்கள் பொதுவிடங்களில் பாதுகாப்பாக இல்லை என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
பெண்களுக்கான அமைப்புகளும் மற்றும் அவற்றைச் சார்ந்த பிற குழுக்களும் குற்றவியல் சட்டங்களில் குறிப்பாக மகளிருக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல காலமாகப் போராடி வருகின்றனர் . அவர்கள் பல முறை சட்ட அமைச்சருக்கும் , அதிகாரிகளுக்கும் தங்களுடைய மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். இக் குழுக்கள் பாலியல் குற்றத்திற்குத் தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச 7 வருட கடுங்காவல் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் .
சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் குழந்தைகள் அமைப்பு (women and Children Foundation )2011இல் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளைத் தடுப்பது எப்படி ? இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று ஓர் ஆய்வு நடத்தியது . அந்த ஆய்வில் வெளியான கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு .
l ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 78.2 விழுக்காடு பேர் இத்தகைய கொடிய குற்றங்களைப் புரிவோருக்கு மரணதண்டனையோ அல்லது “கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்பது போன்ற அரேபிய நாடுகளில் நிலவும் தண்டனையோ கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.
l இவ்வாறான கருத்தைப் பெண்களில் 82.1 விழுக்காட்டினரும் ஆண்களில் 74.2 விழுக்காட்டினரும் கொண்டுள்ளனர்.
lகருத்துக்கணிப்பில் பங்கு கொண்ட வழக்கறிஞர்களில் 67 விழுக்காடு பேர் அவ்வாறே கூறினர்.
மேலும் இந்தக் கருத்துக்கணிப்பின்படி பெண்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் . மாற்றாக ரசாயன முறையில் வீரியத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தனர்.
மக்களுக்கு குற்றவாளிகள் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் என்றாலும் , மரணதண்டனை விதிப்பது இதற்கு ஒரு தீர்வாகுமா என்பதுதான் இங்கு எழும் முக்கியமான வினவாகும்.
வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக அரசு மற்றும் மதச்சார்பான அமைப்புகள் சாதாரண குற்றங்களுக்குக்கூட மரணதண்டனை விதித்துள்ளது தெரிய வருகிறது. தமிழகத்தில் பழம் வரலாற்று ஆவணங்களைப் பார்த்தால் கூட பல முறை மரணதண்டனை விதிக்கப்பட்டது தெரியவருகிறது . சிலப்பதிகாரத்தில் அரசியின் ஆபரணத்தை திருடினான் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டிற்காகத் தீர ஆராயாமல் மரணதண்டனை விதிக்கப்பட்டது புலனாகும்.
ஐரோப்பிய நாடுகளில்தான் முதன்முறையாக மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இன்று உலகளவில் பார்க்கும்போது சுமார், 140 நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்தோ அல்லது தற்காலிகமாக நிறுத்தியோ வைத்துள்ளன.வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா போன்ற சில நாடுகள் நீங்கலாக மற்ற அனைத்து நாடுகளிலும் மரணதண்டனை விதிப்பது இப்போது நடைமுறையில் இல்லை. அமெரிக்காவில் 1972 முதல் 1976 வரை மரணதண்டனை சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அெமரிக்க கூட்டமைப்பின் சில மாகாணங்களில் மரணதண்டனை அமலில் இல்லை. ஆனால் அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண்ணான இந்தியாவில் இந்த தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளதும் குறிப்பாக, சமீபத்தில் இரண்டு மரணதண்டனைகள் சர்ச்சைக்குரிய முறையில் நிறைவேற்றப்பட்டன என்பதும் மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும். மரண தண்டனை கொடுப்பதனால் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் குறைகின்றனவா என்று அமெரிக்காவில் 1977-1996இல் நடைபெற்ற ஓர் ஆய்வு, குற்றங்கள் குறிப்பிடத்தகுந்த அளவு குறைகிறது என்று கூறியபோதிலும் வேறு பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இரண்டிற்குமிடையே தொடர்பு இருப்பதாகக் காட்டவில்லை .
மரணதண்டனை நிறைவேற்றுவதால் சமுகத்தில் ஏற்படும் சிக்கல்களையும் உற்று நோக்கவேண்டும். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அது இழப்பீடு செய்ய முடியாத ஒரு செயலாக அமைந்துவிடும் .நம் நாட்டில் மரணதண்டனை (Rarest of rare cases ) அதாவது மிகவும் மொடூரமான, திருத்த முடியாத குற்றவாளிகளுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பது பசன் சிங் வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நியதியாகும்
அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) ஆகிய அமைப்புகள் , குற்றம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் மரணதண்டனை வாழ்வுரிமைக்கு எதிரானது. ஆகவே, அது மனித உரிமைக்குப் புறம்பான செயலாகும் என்றும் முறையீடு செய்கின்றன. எனவே, சமுதாயத்தைத் திருத்தவும், வழிபடுத்தவும் உரிய உத்வேகமான செயல்களில் சமூக அமைப்புகளும் அரசாங்கமும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் நாட்டில் இதுபோன்ற குற்றங்களை முற்றிலும் தடுக்க முடியாமல் போனாலும் வெகுவாகக் குறைக்க முடியும்.
அரசு அதற்கான நடவடிக்கை எடுக்குமா ?

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!