கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கலையரசன் பல்வேறு கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரகலட்சுமியும் கிராமிய கலைகளில் மிகுந்த ஆர்வமுடையவர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், அதற்கான குற்றங்களுக்கான தண்டனை சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும் கைகளில் பறை இசைத்தபடி, 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்த படி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்த இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை குறித்து பிரகலட்சுமி கூறுகையில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகப்படுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அப்பாவை போன்று பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.