கவிஞர், சிறுகதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர், திரைப்படக் கதாசிரியர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர், சீர்திருத்தவாதி, சித்த மருத்துவர் இப்படிப் பல அடையாளங்களைக் கொண்டவர்தான் குட்டி ரேவதி.
உண்மையில் குட்டி ரேவதியின் அடையாளம்தான் என்ன?
‘நான் யார் என்ற கேள்வியின் உருவம், என்னைக் கவிஞராக அடையாளப்படுத்துகிறது’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் குட்டி ரேவதி.
1973இல் திருச்சிராப்பள்ளியில் பிறந்த குட்டி ரேவதி ஏழு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டாராம். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட சித்த மருத்துவம் பயின்றார் குட்டி ரேவதி.
‘சித்த மருத்துவ நூல்களை வாசிக்கும் பழக்கம், தமிழ் மீது இருந்த ஈடுபாட்டை மேலும் மெருகூட்டியது. சித்த மருத்துவராக இல்லாமல் இருந்திருந்தாலும் கவிஞராகியிருப்பேன்’ என்கிறார் அவர்.
‘கவிஞராக இருப்பதினால், எனக்குத் தோன்றும் கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்ல முடிகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பேச முடிகிறது’ என்கிறார் குட்டி ரேவதி.
2000இல் குட்டி ரேவதியின் முதல் கவிதை நூலான ‘பூனையை போல அலையும் வெளிச்சம்’ வெளியானது .
2002இல் ‘முலைகள்’ என்ற இவருடைய கவிதை நூல் வெளியானது. அது தமிழ் இலக்கிய பழைமைவாதிகளுக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘ஆண் படைப்பாளர்களுக்குப் பெண் படைப்பாளர்களிடம் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுவே சர்ச்சைக்கான காரணமாக நான் பார்க்கிறேன். மேலும் உடல் உறுப்புகள் வழியாக ஒரு பெண் ஒடுக்கப்படுவதைக் குறிப்பிடுவதற்கு, ஒரு சொல்லைப் பயன்படுத்துவது என்பது எந்தவகையில் தவறானதாக இருக்க முடியும்’ என்று உறுதியோடு இருக்கிறார் இந்தப் புரட்சி நாயகி.
‘முலைகள்’ கவிதை நூல் உலகக் கவனம் பெற்றது. ஆண் ஆதிக்கம் கொண்ட உடல் அரசியலை உடைக்கும் பிம்பங்களாக குட்டி ரேவதியின் கவிதைகள் வெளிப்பட்டன.
‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்,’ ‘மாமத யானை,’ ‘முத்தத்தின் அலகு,’ ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்,’ ‘யானுமிட்ட தீ’ எனப் பல கவிதை நூல்களை வெளியிட்டு இருக்கிறார் குட்டி ரேவதி.
கவிதைகள் மட்டும் அல்லாமல் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் குட்டி ரேவதி. ‘நிறைய அறைகள் உள்ள வீடு,’ ‘விரல்கள்’ போன்றவை அவருடைய முக்கிய சிறுகதைத் தொகுப்புகள்.
தமிழ் நவீனப் பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிய ஆய்வாக, ’ஆண் குறி மையப் புனைவை சிதைத்த பிரதிகள்’ என்ற நூலையும் வெளியிட்டுக் கவனம் பெற்றார் குட்டி ரேவதி.
குட்டி ரேவதியின் கவிதை நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்’ என்று சொல்லும் அவர் தன் கவிதைகளின் மூலம் அதைச் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.
‘சாதியும் மதமும் இல்லையெனில் மனிதனுக்கு தன் சக மனிதனை சமத்துவத்தின் கண்களோடு பார்க்கும் பார்வை வந்துவிடும்’ என்கிறார் அவர்.
‘மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு உண்டாகிற எதையும் அழித்தொழிக்க வேண்டும்’ என்று உரக்கச் சொல்கிறார் இந்தப் புரட்சிப் பெண்மணி.
எழுத்தின் வழியாக உலகைப் பார்த்து உலகை வடித்த குட்டி ரேவதி காட்சி ஊடகம் மூலமாகவும் தன் கற்பனையையும், கருத்தியலையும் வடிக்கும் ஆர்வம் கொண்டார்.
கேரளத்தின் புகழ்மிக்க படைப்பாளி கமலா தாஸ் பற்றி ‘Looking through the glass,’ (கண்ணாடி வழியாகப் பார்த்தல்) என்ற குட்டி ரேவதியின் ஆவணப் படம் ஒரு படைப்பாளியின் பல கோணங்களைப் பதிவாக்கியது
2008இல் இருளர் திருவிழா பற்றி இவர் இயக்கிய, ‘Never Ending Dance,’ (எப்போதும் முடிவுறா நடனம்) என்கிற படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
தனது அடுத்த பரிமாணமாக திரைத்துறையில் திரைப்படக் கதாசிரியராக நுழைந்தார் குட்டி ரேவதி. கதை எழுதும்போது தனக்கு பரவசமான அனுபவம் கிடைப்பதாகக் கூறுகிறார் அவர்.
இயக்குனர் பரத்பாலா படைத்த, ‘மரியான்’ படத்தில் பணியாற்றிய குட்டி ரேவதி, அந்தப் படத்தின் புகழ்பெற்ற ‘நெஞ்சே எழு’ பாடல் மூலம் தமிழ்நாடெங்கும் பிரபலமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய அந்தப் பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது. ’அது எனக்கான ஒரு புதிய நெடுஞ்சாலையைத் துவக்கியது’ என்று மெய்சிலிர்க்கிறார் அவர்.
‘மாயா’ ‘8 தோட்டாக்கள்’ போன்ற படங்களிலும் அவர் பாடல்களை எழுதியிருக்கிறார்.
‘எனது படைப்பாற்றலைப் பெரிய அளவிற்குத் தீவிரப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக, சினிமாவைப் பார்க்கிறேன்’ என்று கூறுகிறார் குட்டி ரேவதி.
‘சிறகு’ என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் குட்டி ரேவதி. விரைவில் வெளிவரத் தயாராக இருக்கும் இந்தப் படம் ஆண், பெண் நட்பு பற்றிய படமாம்.
‘உங்கள் கவிதைகள் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா’ என்று கேட்டால், ‘அதை என் கவிதைகளை வாசிப்பவர்களிடம்தான் கேட்க வேண்டும்’ என்று புன்னகைக்கிறார் குட்டி ரேவதி.
‘பனிக்குடம்’ என்ற பெண்ணிய இதழை நடத்திவரும் குட்டி ரேவதி அதில் பெண்களின் படைப்புகளையும், பெண் சார்ந்த அரசியலின் நுட்பங்களையும் பதிப்பித்துவருகிறார். பெண்ணுக்கான தனி மொழியை அடையாளம் காட்டும் தளமாக அது இயங்கி வருகிறது.
தன் கல்வியான சித்த மருத்துவத்தையும் குட்டி ரேவதி மறந்துவிடவில்லை. கடந்த 5 வருடங்களாக சித்த மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகளை அவர் தயார் செய்து வருகிறார். மேலும் சித்த மருத்துவம் குறித்த நூல்களையும் அவர் எழுதி வருகிறார்.
‘சித்த மருத்துவத்திற்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும்’ என்கிறார் அவர்.
தன் கவிதைப் பணிக்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் குட்டி ரேவதி.
பெண்ணியத்திற்காகவும், ஜாதி மத ஒழிப்பிற்காகவும், தன் எழுத்தைப் படைத்து “உலகே எழு” என்று உற்சாகம் அளிக்கிறார் இந்த எழுச்சி நாயகி.
-குட்டி ரேவதி