விறலி எனும் பெண் பிம்பம்!
முனைவர் அமுதா பாண்டியன்
சங்ககால தமிழ் சமூகத்தின் செய்தித்தொடர்பாளராக இருந்தவர்கள், பாணர்கள். இவர்கள் ஆடுவதையும், பாடுவதையுமே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். பாணர்கள் கூட்டத்தில் இடம்பெறும் பெண்கள் விறலி , பாடினி, பாணர்பெண், பேய், பேய் மகள் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
விறலி ஆடல் பாடல்களில் சிறந்தவளாகவும், கற்பில் மேலானவளாகவும் காட்டப்படுபவள்.
முகபாவனைகளாலும், அங்க அசைவுகளாலும், பாடும் பாடல்களின் பொருளை விறலி விளக்குவது பார்ப்போரை மெய்மறக்க செய்திடும். விழாக் காலங்களில் இலைகளைக் கொண்டு இடுப்பை மறைத்து, இவர்களாடும் அழகைக் காண மக்கள் கூட்டம் திரளும். விறலி என்பவள் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் கண்டெடுக்கப்பட்ட அழகு ஆடல் அணங்காக இருக்கக்கூடுமோ என்று எண்ணத் தோன்று கிறது.
வேதகால மக்கள் பொரும் பாலானோர் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னகத்தில் குடியேறினர். அப்போது விறலியின் பாடலும், நடனமும் புறம் தள்ளப்பட்டன. அழகும், பாட்டும், நடனமும், ‘ஆபாசம்’ என்று கருதி உடலுறவு கோட்பாடுகளை ஆராய்ந்து காமசூத்திரம் எழுதிய சமுதாயம் ஒருபுறம். ஆண் பெண்ணுக்கான அன்பைப் போற்றி அகத்தினை எழுதிய சமுதாயம் மறுபுறம். இரண்டிற்கும் இடையில் படாதபாடுபட்டாள் விறலி.
ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய சில விறலியினர் மாதவியராக உருவெடுத்தனர். மேலும் சில விறலியரோ, பேய் மகளிரோடு சேர்ந்து தேவரடியாராக உருவம் கொண்டு கோவிலுக்குள் புகுந்தனர். கணவனுக்கும் மனைவிக்குமான அன்பைக் கூறி ஆடிப்பாடிய பெண்கள், தங்களுக்கும் தெய்வத்திற்குமான தெய்வீகக் காதலில் திளைத்தனர். தெய்வத்தைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, பூத்தொடுத்து மாலையணிவித்து, ஆடலாலும், பாடலாலும் இறைவனை வணங்குபவர்களாக இவர்கள் இருந்தனர். தெய்வத்திற்காகவே வாழ்ந்த இவர்களை தேவரடியர், அணுக்கியர், பரவையர், கணிகையர் என்றும் அழைத்தனர்.
பக்தி இலக்கிய காலத்தில், கடவுளோடு ஒன்றுபட்ட காரைக்கால் அம்மையார் தன்னை ‘பேய்’ என்று அழைத்து சிவபெருமானுடன் காதல் கொண்டு பக்தி இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார். ஆண்டாள், இறைவனோடு இயைந்து மிக அழகிய பாடல்களைப் பாடினார்.
தெய்வப் பணியோடு குடும்ப பணி செய்யவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. அதனால் பலர் தனக்கான ஒருவனைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தவர்களும் உண்டு. இருப்பினும், கணவன் இறந்த உடன் மாங்கல்யத்தை இழக்க தேவையிருக்கவில்லை. நித்திய சுமங்கலிகளாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
நாதமுனி, ஜெயதேவர் போன்றோர் தங்களின் பக்தியைத் தங்கள் மொழிகளில் இந்தியாவெங்கும் கொண்டு சென்றனர். ஜெயதேவர் ஒடிசாவிற்கு விறலியையும் அழைத்துச் சென்றார். அங்குள்ள கோவில்களில் நடன சாலைகளை அமைக்க செய்தார். அதில் விறலியை நடனமாட வைத்தார் அவர்.
பாணர்களைக் கோவில்களுக்குள் செல்ல தடை விதித்திருந்த காலங்களிலும் பாணரான கனகதாசர், கோவிலுக்கு எதிரில் குடிசையிட்டு சுவைமிக்க பக்திப் பாடல்களைப் பாடினார். அவை இன்று சமுதாய மேல்தட்டு மக்களின் நாவால் வெளிவருகின்றன.
ராஜராஜசோழன் காலத்தில் விறலியரை ‘தளிச்சேரி பெண்டிர்’ என்று அழைத்து, அவர்களை மதிப்புடன் நடத்தினர். அது, இன்றும் பெரியகோவில் கல்வெட்டுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.
முதலாம் ராஜேந்திர சோழன் விறலியரை தன் அருகில் அமரவைத்து தேரில் வலம் வந்தார். கோவில்களில் ராஜேந்திர சோழனுக்கும், அணுக்கியர்களுக்கும் சேர்த்தே காணிக்கைகள் செலுத்தப்பட்டன. தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை விறலியர் கோவில் கட்டவும், பஞ்சம் போக்கவும் கொடுத்திருக்கின்றனர்.
மன்னர்கள் தலைக்கோல் பட்டம், நிலக்கொடை, பொன், பொருள் கொடுத்து அவர்களைக் கௌரவித்தனர்.
வடநாட்டு மன்னர்களால் தமிழ்நாடு கைப்பற்றப்பட்டபோது, விறலியர் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் ஆண்களின் ஆசைகளுக்கு அவர்கள் ஆளாகினர். தேவரடியாரான விறலியர் தேவதாசியராக மாறினர். மன்னரை மகிழ்விக்க அவர்தம் மொழிகளையும் கற்றனர். அம்மொழிகளிலும் பாடல்களை இயக்கி ஆட கற்றுக்கொண்டனர்.
தமிழ்மொழி பாடல் மரபு சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் விறலியின் பாடல்களால் மெருகூட்டியது.
அவர்களின் பாடல்களை மேற்குலத்தோரான வைதீகர்கள் கற்க ஆரம்பித்தனர். திருவையாறு மூவரில் முதல்வரான முத்துசாமி தீக்ஷிதரின் தந்தை ராமசாமி தீக்ஷிதர், இத்தேவதாசிகளிடமிருந்து தான் பாடல்களைக் கற்றுக்கொண்டார்.
20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில், ருக்மணி அருண்டேல் என்ற பிராமணப் பெண் பெரும் எதிர்ப்புகளுக்கும் இடையே பாட்டையும், நடனத்தையும் தேவரடியாரான கௌரி அம்மாளிடம் கற்றுக் கொண்டார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரும், ருக்மணி அருண்டேலும் சேர்ந்து கலாக்ஷேத்ராவைத் தோற்றுவித்தனர்.
திருவையாறு தியாகராய சுவாமிகளுக்கு சமாதி கட்டும் இடத்தில் நடந்த குழப்பங்களை ஆற்றுப்படுத்தி தன் பாடல்களால் ஆராதனையைத் துவக்கி வைத்தவர் நாகரத்தினம்மாள் என்ற தேவதாசியர்.
தேவதாசியர் தாழ்ந்த குலமாகக் கருதப்பட்டனர். இருப்பினும் கற்பிலும், ஈகை குணத்திலும், கலை ஆற்றலிலும் வல்லுநர்களாகவே அவர்கள் இருந்தனர்.
இவர்கள் வாழ்க்கையை இழிந்ததாகக் கருதி ஆங்கில அரசும், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் போன்ற தேவதாசி குலப் பெண்களும் தேவதாசி முறையை ஒழித்தனர். ஆனால் அவர்கள் வாழ்விற்கும் கலைக்கும் ஆதாரமாக மாற்று ஏற்பாடு செய்ய மறந்துவிட்டனர்.
வீட்டைச் சுத்தம் செய்வதற்காக வீட்டையே அழித்த கதையாகிவிட்டது, விறலியர்களின் வாழ்க்கை. அவர்களுடைய கலைகளைத் தங்களுடையதாக்கி, அவர்களைத் தவிக்க விட்டனர் சமுதாய மேல்தட்டு மக்கள்.
விறலியிடம் இருந்தபோது இழி கலையாக கருதப்பட்ட கர்நாடகமும், பரதமும் இப்போது மேல்தட்டு மக்களிடையே நாட்டிய சாஸ்திரத்திலிருந்து பிறந்த தெய்வீகக் கலைகளாகப் போற்றப்பட்டு வெளிநாடுகளிலும் வலம் வருகின்றன. ஆனால் விறலியோ கலையிழந்த இசை வேளாளப் பெண்ணாகத் தவிக்கிறாள்!!!