கர்ப்பத்தில் முத்துப்பிள்ளை
சந்தோஷி, மகப்பேறு மருத்துவர்
திருமணமானவுடன் சில தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால், சிலருக்குக் கர்ப்பம் தரிப்பதில் குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. இன்னும் சிலருக்கு கர்ப்பமே பிரச்சனையாகலாம். அப்படி ஒரு கர்ப்பம்தான் முத்துப்பிள்ளை. முத்துப்பிள்ளை கர்ப்பம் மிகவும் ஆபத்தானது. சரியான நேரத்தில் கண்டறிந்து சரிசெய்வது அவசியம். கர்ப்பம் தரிக்கின்ற 1 முதல் 2 சதவீதப் பெண்களுக்கு இந்த நிலை ஏற்படலாம். சரி, அது என்ன முத்துப்பிள்ளை எனக்கேட்கிறீர்களா? ஆம், நிச்சயமாக ஒவ்வொரு பெண்ணும் தொிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இப்படி ஒரு பெண் கருவுற்றவுடன் ஏற்படும் அத்தனை அறிகுறிகளும் இருக்கும்.
மாதவிலக்கு தள்ளிப்போவது, வாந்தி, மயக்கம், தலைசுற்றல், சிறுநீர், இரத்தப்பரிசோதனையிலும் கர்ப்பம் உண்டானதற்கான பாசிட்டிவ் ரிசல்ட் காணப்படும். ஆனால், 45 நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்தால் முத்துப்பிள்ளை கர்ப்பத்தைக் கண்டறியலாம். கருவோ, கருவளரும் பையோ, நஞ்சுத்திசுக்களோ காணப்படாமல் திராட்சைக் கொத்துப்போன்று நஞ்சு மட்டும் காணப்படும். முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தொிந்தால் கருவைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. கருவைக் கலைப்பதைத் தவிர்த்தால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்.
சரி, அப்படியே கருவைக் கலைத்துவிட்டோம் என்று அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. கரு கலைந்த பிறகும், எங்கேயாவது திசுக்கள் ஒட்டிக்கொண்டிருந்தால் அது பின்னாளில் புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு 2 சதவீதம் உள்ளது. எனவே, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பீட்டா ஹெச்.சி.ஜி. என்ற ஹார்மோன் டெஸ்ட் எடுத்துக்கொண்டு முத்துப்பிள்ளை கர்ப்பத்தின் திசுக்கள் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்துக்கொண்டு மருத்துவ ஆலோசனைப்படி தேவையான மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் திசுக்கள் இல்லாமல் நெகட்டிவ் எனத் தொிய வந்த பிறகு சிலகாலம் கழித்து மீண்டும் கர்ப்பம் தரிக்கலாம். எனவே, கர்ப்பம் என சிறுநீர்ப்பரிசோதனை மட்டும் செய்து கொண்டு வீட்டில் இருக்காமல் மருத்துவ ஆலோசனைப்படி போலிக் ஆசிட் என்ற விட்டமின் மாத்திரை சாப்பிடுவது, ஸ்கேன் செய்து கர்ப்பம் சரியான வளர்ச்சியோடு ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது மிக மிக அவசியம்.
முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் நடப்பது என்ன தொியுமா?
வழக்கமாக ஒரு கருவில் ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் சேர்ந்து காணப்படும். முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் ஆணின் குரோமோசோம்கள் இரட்டிப்பு அடையும். ஆனால், பெண்ணின் அதாவது தாயின் குரோமோசோம்கள் முற்றிலும் இல்லாமல் போகிறது. இதனால், கரு இருப்பதில்லை. மாறாக, நஞ்சு மட்டுமே திராட்சைக் கொத்து போல காணப்படும்.
ஒருமுறை முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட்டால் மீண்டும் வர வாய்ப்பும் உள்ளது. வயது அதிகமானால் பெண்களுக்கும், இளம் வயதில் கர்ப்பம் தரிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுகின்றவர்களுக்கு முத்துப்பிள்ளை உண்டாவதாகவும் ஆய்வுகள் தொிவிக்கின்றன.