திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராஜா நகரம், மோட்டூர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நூறு ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை அரசு சார்பில் வழங்கப்பட்டது. அந்த இடத்தினை அளந்து கொடுக்க கூறி ஆதிதிராவிடர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். ஆனால், இந்த இடத்தில் அளந்து கொடுக்கக் கூடாது என்று வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இந்த பிரச்சினை குறித்து கடந்த 25 ஆண்டு காலமாக இரண்டு சமூகத்தினரிடையே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆகியோர் தலைமையில் 400 போலீசார் குவிக்கப்பட்டு ராஜா நகரம் மோட்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் இடத்தை அளக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இடத்தை அளந்து கொடுக்கும் பிரச்சினையில் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் இரண்டு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சுமூகமான முறையில் பிரச்சினை முடிவுற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடத்தை அளந்து கொடுக்கக்கூடாது என்று வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மேலும் பலர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்று தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு செய்ய 400 போலீசார் தொடர்ந்து இந்த கிராம பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்துள்ள போலீசார் இந்த ராஜா நகரம் மோட்டூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது.