சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் வாகனம் நிறுத்தும் வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்றிரவு விநாயகபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36), நவீன் (36) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமரன் (34) ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தை சரக்கு வாகனத்துக்கு பின்னால் நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணையா சரக்கு வாகனத்தை பின்நோக்கி எடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கமலக்கண்ணன் உயிரிழந்தார். காயமடைந்த நவீன், குமரன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியில் குமரன் உயிரிழந்தார். காயமடைந்த நவீன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநர் கண்ணையா, அவரது உதவியாளர் கிரீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான சூழ்நிலை அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.