பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை
செல்வகுமாரி நடராஜன், வழக்கறிஞர்
குடும்ப வன்முறைகளால் படித்த, படிக்காத பெண்கள் என்ற வித்தியாசமின்றி பலர் பாதிக்கப்படுகின்றனர். அன்றாட நிகழ்வாகக் குடும்ப வன்முறை நடந்து வருகிறது. ஆனால், பெண்களாகிய நமக்கு அதைப்பற்றிய தெளிவான பார்வை இருப்பதில்லை. குடும்ப வன்முறை குறித்து சட்டம் என்ன சொல்கிறது எனப்பார்க்கலாம்.
குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர்மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறை எனப் பொதுவாகக் குறிப்பிடலாம்.
துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்துதல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் வெளிப்படலாம்.
இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்பக் கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களைக் குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.
குடும்ப வன்முறையின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களுக்கு சிலச்சில உரிமைகளை மட்டும் அளித்துவிட்டு பெரும்பான்மையான உரிமை மீறல்களும் நடந்துகொண்டு இருக்கிறது.
குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகள்: மாமியார் கொடுமைகள், கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள், கணவனால் மறுக்கப்படும் உரிமைகள், அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை, சுதந்திர உரிமை, பெண் சிசுக் கொலைகள், வரதட்சணைக் கொடுமை, பெண் கருக்கொலைகள், மனைவியை அடித்துத் துன்புறுத்தல், விதவைகள் கொடுமைகள், குழந்தை மனித உரிமை மீறல், கொலைகள் புரிதல், எரித்தல் போன்றவை.
குடும்ப வன்முறை நடைபெறும் விதங்கள்: பெற்றோர்களால் குழந்தைகள் கொல்லப்படுதல், வீட்டு வேலையாட்களை உரிமையாளரே கொல்லுதல், வீட்டு வேலையாட்கள் வீட்டின் உரிமையாளரைக் கொல்லுதல் , கொள்ளை போன்ற செயல்களில் வீட்டு வேலையாட்கள் ஈடுபடுதல், மாமனார் / மாமியார் கொடுமையினால் திருமணமான பெண்கள் கொலை செய்யப்படுதல், சொத்துக்காக சகோதரரோ / சகோதரிகளோ கொல்லப்படுதல், உடல் சார்ந்த வன்முறைகள் – சிறு காயங்கள் / பெருங்காயங்கள் ஏற்படுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் / சித்திரவதை செய்தல், உளவியல் மூலம் / வார்த்தையின் மூலம் அவமதித்தல், பொருளாதார ரீதியாகப் பயமுறுத்துதல், வீட்டுக் காவலில் வைத்தல்.
“பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள்” என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண் குழந்தை தப்பித்து பருவ வயதை அடைந்துவிட்டால் பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலைக் காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமை கள், சட்டத்தில் ஆண் களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்குத் தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.
குடும்ப வன்முறைக்கு சட்ட நடவடிக்கைகள்:
பெண்களின்மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல். பெண்களுக்கான மனித உரிமைப் பிரிவுகளை ஏற்படுத்துதல். வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்துதல். பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின்கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை. குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பிரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம். தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் – ஆகியன.
பெண்கள் ஒரு பீனிக்ஸ் பறவை போல …
இப்பூமியில் வாழ்வதற்கு அவர்கள் மீண்டும் மீண்டும் எரிந்துகொண்டிருக்கிறார்கள், நமக்கெல்லாம் தெரியும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று. ஆனால், ஒவ்வொரு முறை எரியும்போதும் அவர்களின் உயிர்போகும் வலியை உணர நாம் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.