ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேல்முருகன் தெருவில் ரேசன் அரிசி மற்றும் கோதுமைகளை பதுக்கிவைத்து, அதை மாவாக அரைத்து விற்பனை செய்து வருவதாக ஒருங்கிணைந்த மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஒருங்கிணைந்த மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மோகன், ஆர்.ஐ. மாதவன் ஆற்காடு வட்ட வழங்கல் தாசில்தார் சந்தியா மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர் இளஞ்செழியன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியாருக்கு சொந்தமான நெல் மண்டியில் சோதனை செய்தனர். அங்கு, சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமை அரைத்து மாவாக கடைகளுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதில், 56 மூட்டை ரேஷன் அரசி மற்றும் 104 மூட்டை கோதுமை என மொத்தம் 9 டன் மதிப்பிலான ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் பொருட்களை பதுக்கி வைத்து மாவாக அரைத்து விற்பனை செய்து வந்த ராஜேஷ்(46) என்பவரை வேலூர் மண்டல குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.