கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்பிரிவை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அந்த நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், குரங்கம்மை நோய் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது எனவும் வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், சென்னைக்கு ஐரோப்பா நாட்டிலிருந்து வந்த விமான பயணி ஒருவரின் முகத்தில் கொப்புளம் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பூனே ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என சான்று வந்துள்ளதாகவும் கூறினார். குரங்கம்மை நோய் குறித்த அறிகுறியோ அல்லது சந்தேகமோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல மக்களை அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே மக்கள் அந்த நோய் குறித்து பயப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.