ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகேயுள்ள பொன்னபந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மஞ்சுளா. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்த 260 மூட்டை நெல்லை சோளிங்கர் அருகே கீழ் வீராணத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக எடை போட்டுள்ளார். அப்போது 19.5 டன் நெல் இருந்தது. ஆனால் எடை போடும்போது அதிக அளவு நெல் வீணாக கீழே கொட்டியது. பின்னர் எடையின் போது முன்னர் இருந்த எடையைவிட 3 ஆயிரம் கிலோ எடை குறைந்து 16.5 டன் மட்டுமே இருந்ததால் விவசாயி மஞ்சுளா அதிர்ச்சியடைந்தார். பின்னர் அது குறித்து வேளாண் உயரதிகாரிகளுக்கு மஞ்சுளா அளித்த புகாரைத் தொடர்ந்து, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 3 டன் நெல்லை எடுத்து செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நெல்லை மஞ்சுளா எடுக்க சென்றபோது அங்கு வேலை செய்யும் சிலர் நெல்லை எடுக்க கூடாது எடுத்தால் தங்களுக்கு கையூட்டாக ஒரு சிப்பம் ரூ.70 வீதம் ரூ.28210 தந்தால் மட்டுமே உங்களுக்கு 3 டன் நெல் திரும்ப கிடைக்கும் என மஞ்சுளாவுக்கு கொலைமிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மஞ்சுளா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர்திகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். தனது நெல்லுக்கு உரிய பணம் வழங்க வேண்டும் இல்லையென்றால் அதிகாரிகள் இழப்பீடாவது தரவேண்டும், நெல்லை கொடுத்தால் அதை ஆடு மாடுகளுக்காவது தீவணமாக பயன்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே, தமிழக அரசின் கீழ்வீராணம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல முறைகேடுகளும் விவசாயிகளுக்கு மிரட்டல்களும் தொடர்ந்து நடந்துவருவதாக கூறப்பட்டு வரும்நிலையில், மஞ்சுளாவின் புகாரால் அது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேடுகளை தடுக்க உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுக்காக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.