திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் பரிசுத்த மெய் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் பாஸ்டராக உள்ள தாஸ் என்பவருக்கும் கூவம் பேருந்து நிலையம் அருகே உள்ள சார்லஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. பாஸ்டர் தாஸ் தேவாலயத்திற்கு வரும் சில பெண்களிடம் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் தேவாலயத்தின் கணக்கு வழக்குகளை சரிவர காட்டாமல் மறைப்பதாகவும் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில், பாஸ்டர் தாஸின் அடியாட்கள் நேற்று இரவு சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து, வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா மகன் சாருகேஷ் உள்ளிட்டோரை இரும்பு ராடு மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சார்லஸ் மனைவி விக்டோரியா, மகள் சவிதா ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதற்கட்ட சிகிச்சையில் விக்டோரியா, சவிதாவின் தலை மற்றும் கால் பகுதியில் 5க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்னதாக சார்லஸின் வீட்டுக்குள், பாஸ்டர் தாஸ்சின் 5க்கும் மேற்பட்ட அடியாட்கள் புகுந்து, குடும்பத்தினரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.