திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு எல் அண்டு டி கப்பல் கட்டும் துறைமுக தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி அப்போது பழவேற்காடு பகுதி மீனவர்கள் எல் அண்டு டி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவ பிரதிநிதிகளுடன் எல் அண்டு டி துறைமுக நிர்வாகம் கலந்துகொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 1750 குடும்பங்களில் உள்ள தலா ஒருவருக்கு வேலை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எல் அண்டு டி துறைமுகத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பங்களுக்கு ஒப்பந்தத்தின்படி ஆறுமாத பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுமென அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக எல் அண்டு டி துறைமுகத்தில் 250 பேருக்கு வேலை வழங்கப்பட்ட போதிலும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்தனர். இதன்தொடர்ச்சியாக, கிராம மக்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்தப்படி எஞ்சிய 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும், கடந்த நான்கு தினங்களாக கடல் மார்க்கமாக படகுகள் மூலம் சென்று எல் அண்டு டி , அதானி துறைமுகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதி வணிகர்களும் கடையடைப்பில் ஈடுபட்டனர். மேலும் மீனவப்பெண்களும் இந்த போராட்ட களத்தில் குதித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. எனவே, தீவிரமடைந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் 2 முறை பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது அவரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியாமல் ஆட்சியர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். பின்னர் மீண்டும் மூன்றாவது முறையாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தடைசெய்யப்பட்ட துறைமுகப் பகுதிகளில் கடல் மார்க்கமாக சென்று போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போது தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக அதானி, எல் அண்டு டி துறைமுக நிர்வாகத்திடம் வருகின்ற திங்கட்கிழமை பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். பின்னர், ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் போராட்டம் கைவிடப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் தங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். ஆட்சியரின் மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பழவேற்காடு பகுதி மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வராததால் மாவட்ட நிர்வாகம் கலக்கத்தில் உள்ளது.