வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தமிழக அரசின் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி வாழ நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற இந்தவிழாவில், கால்நடைத்துறை உதவி இயக்குநர் அந்துவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கள்ளச்சாராய விற்பனை தொழிலை செய்தவர்கள் அந்த தொழிலை கைவிட்டு மனம் திருந்தி மறுவாழ்வு வாழ, பொருளாதார ரீதியாக உதவும் வகையில், முதற்கட்டமாக 10க்கும் மேற்பட்டோருக்கு கறவை மாடுடன் கன்றையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “குரங்கு அம்மை நோய் குறித்து தமிழக சுகாதாரத்துறை மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் வந்துள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு குரங்கு அம்மை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு நமது வேலூர் மாவட்டத்தின் வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட 2 இடங்களில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கென, வருவாய்த்துறையுடன் பிற துறைசார் அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முழுமூச்சில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.