திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பி.சி.என்.கண்டிகை கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வருபவர் பங்காரம்மா(64). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள இவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் பணம், 10 பட்டுப் புடவைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பங்காரம்மாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் நேரில் வந்து பார்த்துள்ளார். இந்தநிலையில் கொள்ளை சம்பவம் குறித்து திருத்தணி குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்த கிராமத்திற்கு அருகில் மூன்று இடங்களில் சில வாரங்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் இதே கிராமத்தில் ஆட்டுக்குட்டி அவ்வப்போது திருடு போவதாகவும் கிராம மக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.