மனித உாிமைகளில் அடங்கிய ஒன்றுதான் பெண்ணுாிமை. ஆனாலும் உலகெங்கும் உள்ள பெண்கள் அவர்கள் பெண்கள் என்பதாலேயே வேற்றுமைப்படுத்தப்படுகின்றனர். சர்வதேச மனித உாிமைப்பிரகடனம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉாிமை உள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதேபோல் இந்திய அரசியமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உாிமைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகவே வரையறை செய்யப்பட்டுள்ளது.
சமத்துவ உாிமை
1950 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமானவர்கள் என்றும், 14ஆவது பிரிவு அனைவருக்கும் சட்டப்பாதுகாப்பு உண்டு என்றும், மதம், இனம், பால், சாதி அல்லது பிறப்பிடம் ஆகியவற்றால் மக்கள் வேற்றுமைப்படுத்தப்படுவதை 15ஆவது விதி தடையும் செய்கிறது.
சுதந்திர உாிமை
ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுதந்திர உாிமையை நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. 19ஆவது பிரிவு பெண்களுக்கு பேச்சுரிமை, கருத்துக்களை வெளிப்படுத்தும் உாிமை, சங்கங்கள் அமைக்கும் உாிமை, அமைதியாகக் கூடும் உாிமை, ஏதேனும் தொழில் அல்லது வேலை செய்யும் உாிமை, இந்திய எல்லைக்குள் சுதந்திரமாகச் சென்று வர உாிமை வழங்கியுள்ளது.
சமூக உாிமை
மணம் புரிந்து கொள்வதில் இருந்து குடும்பம் அமைத்துக்கொள்வது, அதில் ஏதேனும் சங்கடங்கள் நோிட்டால் திருமண உறவை ரத்து செய்வது வரை ஆணைப்போலவே பெண்ணுக்கும் உாிமை உள்ளது. மணமக்களின் முழுமையான சம்மதத்தோடு தான் திருமண உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். சமுதாயம் மற்றும் அரசிடமிருந்தும் பாதுகாப்பு பெறும் உாிமை பெண்ணிற்கு உண்டு.
அரசியல் உாிமை
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் பொதுவாழ்வில் ஈடுபடுதல், அரசியலில் ஈடுபடுதல், தேர்தலில் போட்டியிடுதல், அரசாங்கத்தை விமர்சித்தல், அரசாங்க நிர்வாகத்தில் பங்கு பெறுதல் போன்ற அரசியல் உாிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உாிமைகளைப் பெண்கள் பயன்படுத்திக்கொண்டு பொதுவாழ்வில், அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க முடியும்.
விவாகரத்து மற்றும் மறுமண உாிமை
உலகில் உள்ள எல்லா மதங்களும் திருமணத்தைப் புனிதமாகக் கருதுகின்றன. ஆனால் ஒன்று சேர்ந்து வாழ முடியாத தம்பதியினர் பிரிந்து செல்ல ஏதுவாக மதத்திற்கு மதம் மாறுபட்ட வகையில் விவாகரத்துச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை விவாகரத்து சட்டப்படி குற்றமாக கருதப்படவில்லை. சட்டப்படி விவாகரத்து பெற்றபெண் மீண்டும் திருமணம் செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கிறது.
கல்வி கற்கும் உாிமை
இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 15 மற்றும் 29ஆவது பிாிவின்படி ஆண்களுக்கு அளிக்கப்படும் அனைத்துக் கல்வி வசதிகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். அதில் ஏற்றத்தாழ்வு கூடாது.
வேலை வாய்ப்பு உாிமை
சம வேலைக்கு சமமான ஊதியம் குறிப்பிட்ட நேரம் வேலை செய்யும் உாிமை, மகப்பேறு உதவி பெறும் உாிமை, பெண்களைத் தரக்குறைவாக சித்தரிப்பதை எதிர்க்கும் உாிமை, பொது வேலைகளில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் உாிமையையும் நம் அரசியலைப்புச் சட்டம் வழங்குகிறது. ஆனால் ஆண்களின் உழைப்பிற்கும், வருமானத்திற்கும் உட்பட்டே பெண்களின் பங்கு இருப்பதால் பெண்களின் பயிற்சி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படாததாலே 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் முறைப்படுத்தப்படாத துறைகளில் பணிபுரிகிறார்கள்.
சொத்துரிமை
சொத்துரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்திய பெண்களுக்கு ஆண்களைப்போலவே உாிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
– ஜெமிலா