ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து வருவாய் அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டு இருந்துதார். இதில், வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் தலைமையில் நடந்தது. முதல் நாளான இன்று குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்று உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர், கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி கூறினார். அதைத்தொடர்ந்து ஜமாபந்தி மனு நாள், அடுத்த நான்கு நாட்கள் தொடர்ந்து வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். இதில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன், சமூக பாதுகாப்புத்துறை வட்டாட்சியர் பாக்கியநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் செல்வி, துணை வட்டாட்சியர்கள் குமார் விஜயசேகர் மற்றும் ஊரக வளர்ச்சி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.