ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜோதி மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்(43). கூலித்தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்(15) என்ற மகனும், சமித்ரா(14) என்ற மகளும் உள்ளனர். முன்னதாக கஜேந்திரனுக்கும் மனைவி சரஸ்வதிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக சரஸ்வதி தனது தாய் வீடான ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ராஜா நகரில் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கஜேந்திரனின் மகன் சுரேஷ், ராஜா நகரில் நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில் காப்பு கட்டியிருந்த நிலையில் குளத்திற்கு குளிக்க சென்றபோது நீரில் முழ்கி இறந்துள்ளார். மகன் இறந்த சோகத்தில் கஜேந்திரன் தொடர்ச்சியாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகனின் இறப்புக்கு மனைவியின் அஜாக்கிரத்தைதான் காரணம் என கூறி, மனைவியுடன் கடந்த பத்து நாட்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தனது மனைவி சரஸ்வதி அழைத்து வந்து வீட்டில் வைத்து பூட்டி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். நேற்று இரவு திரும்பி வந்து பார்க்கும்போது மனைவி சரஸ்வதியை காணவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன், அவரின் தந்தை கன்னியப்பன் மற்றும் தாய் இந்திராணியிடம் கேட்டுள்ளார். இதனால், கன்னியப்பனுக்கும் கஜேந்திரனுக்கும் வாக்குவாதம் முற்றி அது கை கலப்பாக மாறி, கஜேந்திரன், கன்னியப்பனின்(67) கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் கன்னியப்பன் அருகில் இருந்த கட்டில் மீது விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் சிவகுமார் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து, கஜேந்திரனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மகன் அடித்ததில் தந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கன்னியப்பனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், 3 அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் இதனால் அவர் எப்போதும் கட்டிலில்படுத்து இருப்பது வழக்கம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.