நீட் தேர்வுக்கு பயந்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இன்று சின்ன சின்ன விஷயங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகம் ஆகிவிட்டது. தவறான முடிவுகளை எடுக்கும் இளம் வயதினருக்கு ‘வாளை தடுக்க கேடயமே பதில். தவிர வேறு வாள் அல்ல’ என்பதை உணர்த்தி அறிவுரைகளை வழங்குகிறார் உளவியலாளர் சிந்து ராஜன்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் என்ன ?
சமூக பயத்தின் அழுத்தம் என்று சொல்லக்கூடிய தாழ்வுமனப்பான்மை, பிறருக்குக் கிடைத்தது, தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் போன்றவை தற்கொலைக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. மேலும் சமூகம் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காக்க முடியவில்லை அல்லது பிறருக்குத் தன்மீது இருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்கிற பதற்றமும் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணம்.
நீட் தேர்வுக்கு பயந்து ஏன் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் ?
பொதுவாகவே தேர்வு என்றாலே ஒரு பதற்றத்தை உருவாக்கும். நீட் தேர்வு என்கிற முறை புதிதான ஒன்று. இத்தனை நாட்களில் படித்ததை இந்த மூன்று மணி நேரத்திற்குள் நிரூபித்தால் மட்டுமே உன்னுடைய கனவான மருத்துவராக முடியும் என்று திணிக்கும் பொழுது வேறு வழி தெரியாமல் இயலாமை எண்ணத்திற்குள் மாணவர்கள் புகுந்து விடுகின்றனர். சமூகக் கோபம், அவர்களின் குடும்ப நெருக்கடி இவையெல்லாம் மன நெருக்கடிக்குக் காரணங் களாக அமைகின்றன.
தற்கொலை செய்து கொள்வதற்குத் தூண்டுவது யார் ?
ஒரு பெற்றோரின் கனவாகவோ அல்லது குழந்தையின் கனவாகவோ மருத்துவப் படிப்பு இருக்கும்பொழுது மாணவரின் மன நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. நம்மால் முடியுமா, முடியாதா என்கிற கேள்வி அவனுடைய நிலைப்பாட்டை இழக்கச் செய்கிறது. போராடுவதற்கு மாணவர்களுடைய மனநிலையைத் தயார் செய்வதற்கான சூழல் கல்வியிலோ சமூகத்திலோ இல்லாதது முக்கிய காரணம்.
அரசாங்கங்களின் முடிவு மாணவர்களுக்கு எதிராக இருக்கிறதா ?
அரசாங்கத்தின் மீது மட்டும் நம்மால் குற்றச்சாட்டை வைத்துவிட முடியாது. தேர்வு வேண்டுமா வேண்டாமா என்ற பயத்தைக் கொடுப்பதை விட அதை எதிர்கொள்ள கூடிய தைரியத்தைக் கொடுக்க வேண்டும். போராட்டம் இல்லை என்றால் எப்படி கஷ்டத்தை அறிந்து அதை எதிர்கொள்வான்?.
சமூகச் சூழல் மாணவர்களை நெருக்கடியில் தள்ளுகிறதா?
கண்டிப்பாக. மக்கள் தொகை அதிகம் இருப்பதால் போட்டியும் அதிகளவில் இருக்கும். எதிர்த்துப் போராடக்கூடிய குணத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களை ஒரு வட்டத்திற்குள் அடக்கி விடாமல் வெளிநடப்புகளைத் தெரிந்து கொள்ள செய்வது அவசியம்,
தேர்வுகள் முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று மாணவர்களுக்கு உறுதி தர வேண்டுமா ?
நிச்சயமாகத் தரவேண்டும். தேர்வுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று முடிவெடுக்கும் சமூகத்தினராலும் பெற்றோர்களாலும் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
வேறு வாய்ப்புகளும் இருக்கின்றன என்று யார் தயார்படுத்த வேண்டும்?
முதல் நிலைக் கல்வியில் இருந்து இடைநிலை கல்விக்கு வருவதற்குள்ளேயே ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு மாணவன் மருத்துவன், இன்னொரு மாணவன் என்ஜினியர் என்று சொல்லி வளர்க்கக்கூடாது. அந்த மாணவனுக்கு என்ன திறமைகள் உண்டு என்று அறிந்து அதன் அடிப்படையில் கற்றுக் கொடுக்கக்கூடிய கல்வியே வெற்றியை தரும்.
இந்த சமூக மன நிலையை மாற்றுவது எப்படி?
ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய உளவியலாளரையோ ஆலோசகரையோ நியமிக்க வேண்டும். அவர்கள் எந்த ஒரு பாகுபாடு மனநிலையும் இல்லாமல் மாணவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு தற்கொலை நடப்பதை ஊடகங்கள் மிகைப்படுத்திக் காட்டுவதால் தற்கொலைகள் அதிகரிக்கிறதா?
ஊடகத்துறை செய்தியைக் காண்பிக்காமல் இருக்காது. எதிர்மறையான நிகழ்வுகளை மட்டுமே காண்பிக்காமல், நேர்மறையான நிகழ்வுகளை எதிர்மறையான நிகழ்வுகளைவிட அதிக அளவில் காண்பிக்க வேண்டும். அதாவது ஒருவன் தற்கொலை செய்து கொண்டதை அதிக அளவில் காண்பிப்பதை விட சமூகத்தில் ஊக்குவித்து வெற்றி அடைந்தவர்களின் செய்திகளை அதிகளவில் பகிர வேண்டும்.
ஒரு தற்கொலை செய்தி பரவி மேலும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களா?
ஒன்றைப் பார்த்து பார்த்து முடிவெடுப்பது தான் அதிக அளவில் இருக்கிறது. எதிர்மறையான செய்திகளே மனதில் எளிதில் பதிகிறது அதனால் குழந்தைகளுக்கு வக்கிர நிலை அதிகரிக்கிறது. அது தற்கொலைக்குத் தூண்ட வாய்ப்பு உள்ளது. எங்களிடம் வரும் பெற்றோர்கள் பலர் தன் பிள்ளை தற்கொலை செய்தியை பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்று வருபவர்கள் உண்டு.
பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு இந்த மாதிரியான மன நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம்?
பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை செலவழித்தே ஆக வேண்டும். குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். ஒன்றுமே தெரியாது என்று நினைக்கக்கூடிய 5 வயதிலிருந்து 18 வயது குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும். தினமும் ஒரு மணி நேரமாவது கைபேசி இல்லாமல் செலவிட வேண்டும். வேலை நாட்களிலும் அவர்களுக்கென்று நேரத்தை ஒதுக்கிச் செலவிட வேண்டும். அப்போது அந்தக் குழந்தைக்குத் தனக்காக ஒருவர் இருக்கிறார் என்ற தைரியமும் மனவலிமையும் உருவாகும்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன அறிவுரைகள் கொடுக்கப்படவேண்டும்?
தற்கொலை என்று வரும்பொழுது ஒன்று, உடனடியாக சூழ்நிலையின் காரணமாக முடிவெடுப்பவர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக, நீண்ட நாட்களாகவே அந்த எண்ணத்தை மனதில் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் அதற்கான அறிகுறிகள் காணப்படும். அந்த குழந்தைகளிடம் ‘நீ என்ன செய்தாலும் உனக்காக நான் இருக்கிறேன்’ என்று சொல்ல வேண்டும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எதிர்த்துப் போராடும் குணத்தை தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர படிப்பென்பது இரண்டாம் பட்சமே.
– சிந்து ராஜன், உளவியலாளர்