திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தீரா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய தம்பி கார்த்திக் மூலமாக ரூ.1 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து கடன் தவணையை கடந்த 5 மாதங்களாக, பிரதி மாதம் இரண்டாம் தேதி, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மூலம் செலுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இந்த மாதத்தவணை செலுத்துவதில் தாமதமானதால் கடந்த வெள்ளிக்கிழமை, நிதி தனியார் நிறுவன ஊழியர்கள் தீரா வீட்டிற்கு சென்று தவணைக்குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தீரா, திங்கட்கிழமை வட்டி தொகையோடு செலுத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தீராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து நிதி நிறுவன ஊழியர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் இன்று தீராவின் தம்பி கார்த்திக் இந்த மாதத் தவணையை வட்டியுடன் சேர்த்து ரூ.6 ஆயிரத்து 818 ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதனை கவனித்த நிதி நிறுவன ஊழியர் ஒருவர், தீராவின் தம்பி கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது ’நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தங்களிடம் கொடுக்காமல் ஏன் ஆன்லைன் மூலம் செலுத்தினீர்கள்’ என கேட்டுள்ளார். அதற்கு ’நீங்களும் பஜாஜ் நிறுவனத்தில் தானே வேலை செய்கிறீர்கள். ஆன்லைன் மூலம் செலுத்தினால் என்ன, நேரடியாக செலுத்தினால் என்ன எனக் கேட்டபோது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாடிக்கையாளரான கார்த்திக் வாணியம்பாடி பகுதியில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர் கார்த்திக் மீது நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், கார்த்திக் தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.