திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முனியூர் பகுதியில் இருந்து வெளக்கல் நத்தம் நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் அரசி, மகள்கள் கனிமொழி, சிவ காயத்ரி, பேரன் சபரி, பேத்திகள் பவனிக்கா மற்றும் சுபப்பிரியா உட்பட 6 பேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். அப்போது, வாலூர் அருகே பர்கூரில் இருந்து தனியார் ஆயில் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு எதிர்திசையில் அதிவேகமாக வந்த மினி வேன், ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்தில் காயமடைந்தவர்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் கனிமொழி மற்றும் அவரது 6 மாத கைக்குழந்தை சுபப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பின்பு, இருவரின் சடலங்களை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காயமடைந்த மற்றவர்கள் சிகிச்சையில் உள்ள நிலையில் சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கந்திலி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மூத்த சகோதரர் முதலாமாண்டு நினைவு அஞ்சலிக்கு தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண், கைக்குழந்தையுடன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.