காலையிலும் மாலையிலும் மட்டும் பருகும் சாதாரண பானம் அல்ல இந்த தேநீர். ஒரு நாளின் எந்த நேரத்திலும் தேவைப்படும் இந்த தேநீருக்கு பல உருவங்கள் இருக்கிறது. காலையில் அரக்கப்பறக்க எழுந்து பணியைத் தொடங்க பலருக்கு இந்த தேநீர் தான் காலை உணவு. தாங்கமுடியாத தலைவலிக்கான நிவாரணியாகவும் டீ இருக்கிறது. பல நாட்கள் பார்க்காத நண்பனை பார்க்கும் போதும், இந்த தேநீர்தான் ஒரு பாலமாக அமைகிறது. ஐநா சபையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளைவிட, இந்த தேநீர் கடைகளில் தான் அதிகமாக பேச்சுவார்த்தை நடக்கும். குளிர்காலத்தில் குளிர்பானம் குடிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், வெயில் காலம் என்று சூடான தேநீரை தவிர்ப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் வண்டிகளின் ஹாரன் சத்தங்களுக்கு மத்தியிலும் உரக்க கேட்கும் ஒற்றை ஒலி ” அண்ணா சூடா ஒரு கப் டீ…” என்பதுதான். ஹாப்பி இன்டர்நேஷனல் டீ டே ப்ரண்ட்ஸ்