தமிழகம் முழுவதும் உள்ள 4,012 மையங்களில் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைப்பெற்று வருகிறது. காலியாக உள்ள 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இன்று எழுதி வருகின்றனர். குரூப்-2 தேர்வர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முன்னதாக அறிவித்துள்ளது. அதன்படி, ”தேர்வெழுதும் அறைக்குள் காலை எட்டரை மணி முதல் அதிகபட்சமாக 8 மணி 59 நிமிடங்கள் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும். எனினும், மதியம் 12.45 மணிக்குப் பிறகே தேர்வர்கள், தேர்வு அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள், ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ”தேர்வர்கள், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் ஸ்மார்ட் வாட்சுகள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேரம் தெரிந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள், சாதாரண கைக்கடிகாரத்தை அணிந்து வரலாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ”இதுமட்டுமின்றி தேர்வு அறை கண்காணிப்பாளரே, அவ்வப்போது நேரத்தை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு முகக் கவசம் கட்டாயமல்ல”, என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.