சென்னை ஐ.சி.எப்.,-பில் தயாராகி வரும் வந்தே பாரத் ரயில்பெட்டிகளை இன்று மத்திய ரயில்வே மற்றும் தகவல்தொடர்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்ததுடன், ஐ.சி.எப்.,-பில் தயாரான 12,000ஆவது எல்.எச்.பி. ரயில்பெட்டியையும் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். ஐ.சி.எப்.,பில் தற்போது தயாராகி வரும் இரண்டு வந்தே பாரத் ரயில்தொடர்களும் வரும் ஆகஸ்டு மாதத்தில் தயாரித்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்று 75 ரயில்தொடர்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பேசிய ரயில்வே அமைச்சர் தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ரயில் ஊழியர்களும் ”தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இது பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும். இந்தாண்டு பட்ஜெட் அறிக்கையில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,685 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே பல்வேறு மேம்பாடுகள் காண உள்ளது. தமிழகத்தில் உள்ள, சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களின் தரம் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்பட மாட்டாது. எங்களது முழுக்கவனமும் தற்போது இந்திய ரயில்வேயில் கவச் ரயில் பாதுகாப்புக் கருவி போன்ற நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்துவதில் உள்ளது. இந்தக் கருவி வந்தே பாரத் விரைவு ரயில்களிலும் பொருத்தப்படும் என்றார்.