இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் கடந்த வெள்ளி முதல் 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 4,00,000க்கும் மேலான மக்கள் 26 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கனமழையால் உருவான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 40,000த்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசி மூலம் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்து தரப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அசாமில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.