வடதமிழக கடலோரம் மற்றும் வடதமிழக உள்மாவட்டங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென சில்லென்று காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், குரிசிலாப்பட்டு மற்றும் கந்திலி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தாலும், கோடை மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்