தமிழக ஆந்திரா எல்லைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு மாராப்பட்டு தரைப்பாலத்தில் செல்லக்கூடிய தண்ணீரில், தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால், பாலாற்றின் தண்ணீரில் நுரை பொங்கி, மாசடைந்து செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாலாற்றின் தண்ணீரில் நேரடியாக தோல் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலப்பதால் மாசுபடுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொழிற்சாலைகளை மூட வேண்டுமென அந்தபகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.