வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சட்டப்பிரிவு 161ன் படியும், அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேலூர் மாவட்ட பொது செயலாளர் முக்தியார் அஹமத் தலைமையேற்க, தொகுதி தலைவர் அல்தாப் அஹ்மத் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர்கள் முகம்மது ஆசாத், நெல்லை முபாரக், ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்தபொதுக்கூட்டத்தில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பேரறிவாளன் விடுதலைக்கான ஒளி கிடைத்துள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் மதிப்பளித்துள்ளது. எனவே ஆளுநர், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய கையொப்பம் இட வேண்டும். இதனையொட்டி, ஆளுநரின் தமிழர் விரோத போக்கை கண்டித்து இந்த மாதம் வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ. சார்ப்பில் நடத்தப்படும்” என்றார். மேலும், மாட்டு இறைச்சி புறக்கணிப்பட்டதால் பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரியாணி திருவிழா சர்ச்சைக்கு காரணமான திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.