காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து கிரஷர் மற்றும் குவாரியில் இருந்து ஜல்லி, எம்சாண்ட் மற்றும் கனிமங்களை ஏற்றி வரும் வாகனங்களை ஓரிக்கை பகுதி கூட்ரோடு வழியாக வாலாஜாபாத் மற்றும் சென்னை செல்ல கடந்த ஏப்ரல் 14 முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல கிரஷர், குவாரிகளிலும் நூற்றுக்கணக்கான லாரிகள், அதில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு தங்களுக்கு மாற்றுவழியில் செல்ல அனுமதிக்குமாறு கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட எஸ்பி எம்.சுதாகரிடம் அளித்தனர். மேலும் மாகரல் இருந்து காவாந்தண்டலம் வழியாக வாலாஜாபாத் செல்ல அனுமதித்தால் ஓரிக்கை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். இதனால் செவிலிமேடு – பெரியார் நகர் போக்குவரத்து நெரிசலை 80% வரை தவிர்க்கலாம் எனவும், பல வருடங்களாக காவாந்தண்டலம் சாலை வழியைப் பயன்படுத்தி வந்த நிலையில் மீண்டும் அந்த வழியில் லாரிகள் அனுமதிக்க மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து உரிய வழிமுறை செய்யப்படும் என்று தெரிவித்தார்.