15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் போட்டியிட உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தபோட்டி நடைபெற இருக்கிறது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் நேருக்குநேர் இந்த இரு அணிகளும் 22 போட்டிகளில் சந்தித்து உள்ளன. இதில் 13 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 8 போட்டிகளில் ஐதராபாத் அணியும் வெற்றிப்பெற்று உள்ளது. மேலும் இதில் ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இத்துடன், இந்தத்தொடரில் ஐதராபாத் அணி 11 போட்டிகளில் பங்கேற்று 5 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதேபோல, கொல்கத்தா அணி 12 போட்டிகளில் பங்கேற்று 5 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஐதராபாத் மற்றும் கொல்கத்தா முறையே 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. எனவே இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால் சற்று முனைப்புடனே விளையாடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.