ராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கரில் உள்ள புகழ்பெற்ற யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து நான்கு மாடவீதிகளின் வழியாக திருத்தேரில் யோக லட்சுமி நரசிம்மசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருள்பாளித்தார். அந்த தருணத்தில் பக்தர்கள் கோவிந்தா தரிசனத்தில் மூழ்கி இருந்தனர். அப்போது, சுப்பாராவ் தெருவை தேர் கடந்து செல்லும்போது, திருவிழாவை காண வந்திருந்த சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராணி (50) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை யாரோ பறிப்பதை உணர்ந்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தங்க சங்கிலியை பறித்து தப்பி செல்ல முயற்சிசெய்த இரண்டு பெண்களை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து பிடிப்பட்ட இருவரையும் காவல்துறையினர் விசாரித்தபோது அவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மணச்சநல்லூர் வாய்க்கால் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சங்கீதா (32), பொன்னாத்தா என்கிற கவிதா (35) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டு உள்ளார்களா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.