மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய “அசானி” தீவிர புயல் இன்று அதிகாலை 02:30 மணியளவில் புயலாக வலுவிழந்து 08:30 மணியளவில் ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரா கடலோர பகுதிகளின் வழியாக நகர்ந்து, இன்று இரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதன்காரணமாக, வடதமிழகம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.