ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நோய்த்தொற்று ஏற்படுவதாலோ அல்லது இயற்கையின் பேரிடராலோ பலர் உயிரிழப்பது தொடர்கதையாக நடந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசு அடைவதே பல சூழலில் மாற்றங்களுக்கும் காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றித் துளியும் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்லும் மக்கள் ஏராளம். அதில் மாறுபட்டவராயத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த ஆர்வமும், எச்சரிக்கை உணர்வும் கொண்டவராய்த் திகழ்பவர்தான் சுனிதா நரேன்.
வழக்கமாக சுற்றுச் சூழல் போராளிகளாகத் தம்மைப் பலரும் காட்டிக்கொண்டு சுயவிளம்பரம் தேடும் பலரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட விளம்பரப்பிரியராக இல்லாமல் நிஜமான களச்செயல்பாடுகளையும், அறிவியல் ஆய்வையும் மேற்கொண்டு சிறந்த சுற்றுச்சூழல் போராளி எனப்பெயர் பெற்றிருக்கிறார் சுனிதா. அவரது சிறந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு 2005இல் பத்ம விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
2003ஆம் ஆண்டு கொக்க கோலா, பெப்ஸி என நாம் விரும்பிப் பருகும் பானங்களில் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். அவர் மேற்கொண்ட ஆய்வில் இதனைக் கண்டறிந்து வெளியே சொன்னபோது பெப்ஸி, கொக்க கோலா நிறுவனங்கள் அதை மறுத்ததோடு ஏளனமும் செய்தனர். ஆனால், பின்னாளில் அவரது ஆய்வின் உண்மைத்தன்மையை அரசும் உணர்ந்து கொண்டது. உணவுப்பாதுகாப்பு தொடர்பாக தற்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களுக்குத் துவக்கப்புள்ளியாக சுனிதா இருந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருக்கும் சுனிதா சிறந்த பத்திரி கையாளரும்கூட. சுற்றுச்சூழலுக்கென்று வெளியாகும் “டவுண்டு எர்த்” என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் உள்ளார். அந்த இதழின் மூலமாகவும், தனது தொடர் செயல்பாடுகள் மூலமாகவும் மழைநீர் சேகரிப்புகள் அவசியம் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டதற்காக 2005ஆம் ஆண்டு “ஸ்டாக் ஹோம் வாட்டர் பிரைஸ்” என்ற விருதும் கிடைக்கப்பெற்றார்.
இன்றைக்கு இந்தியா வும், சீனாவும் பின்பற்றிக் கொண்டிருக்கும் மேற்கத்திய வளர்ச்சி வடிவம் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட பசுமைத் தொழில் நுட்பங்கள் மட்டும் போதாது பசுமை அரசியலும் வேண்டும் என்கிறார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிக் கவலைப்படாத அரசை நாம் புறக்கணிக்க வேண்டும். நமது வாக்குகள் ஒருபோதும் அவர்களுக்கு இல்லை என்ற உறுதி நம்மிடம் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நம்முன் வைக்கிறார். இவற்றையெல்லாம் சாதிக்க அறிவியல் துறையில் நிறைய பெண்கள் வரவேண்டும் என்கிறார் சுனிதா.
– சுனிதா நரேன்