இன்னும் கூட இச்சமூகம் தொட மறுக்கும் தொழு நோயாளிகளை சீராட்டி பாராட்டி அவர்களை மனிதர்களாக மாற்றக் கூடியவர்தான் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்.
தனது எட்டு வயதிலேயே மாறுவேடப் போட்டிக்கு என்ன வேடம் போடலாம் என எல்லோரும் சிந்திக்க, ‘அப்பா!!! நாம் அங்க போறப்ப ஒருத்தங்க கை கால் எல்லாம் முடங்கி தரையில உட்கார்ந்து நம்மகிட்ட காசு கேட்டாங்கள்ல அவங்கள மாதிரி நான் வேடம் போட்டுக்கவாப்பா?’ என மழலை மொழியில் கேட்டாராம் ரேணுகா. தந்தையும் தலையசைக்க அவரின் உதவியோடு மாறுவேடப் போட்டியிலும் முதலிடம் பிடித்தாராம். அந்நோய் என்னவென்று அறியாத வயதிலும் ரேணுகாவின் மனதில் பதிந்தது மனிதம்.
ரேணுகா வளர வளர சேவை மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது எனலாம். 16 வயது பள்ளி சிறுமியாக இருக்கும்போது தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் பெரியவர் ஒருவர் இறந்து கிடந்ததை ரேணுகா கண்டாராம். அதனைப் பார்த்தவர்கள் இறந்து கிடப்பவர் மனிதர் என்பதை மறந்து, குளத்தின் புனிதம் கெட்டுவிட்டது என அங்கலாய்த்தனராம். அவரை யாரும் நெருங்கக்கூடத் தயங்கினார்களாம். காரணம் அவர் ஒரு தொழுநோயாளி என்பதுதான்.
அவ்வழியே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ரேணுகா அவரைக் கண்டவுடன் தன் துப்பட்டாவைக் கொண்டு இறந்தவரின் உடலை மூடினாராம். ‘எனக்கு அவரை அடக்கம் செய்ய உதவி செய்யுங்கள்’ என கெஞ்சி ரிக்ஷாக்காரர்களின் உதவியோடு இறந்தவரைத் தன் மடிமீது வைத்து இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறந்தவரின் மகளாகத் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்தாராம். இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கூறும்போதே கண்ணீர் மல்குகிறார் ரேணுகா.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னரே ரேணுகாவிற்கு பற்றிக்கொண்டது சேவைத் தீ. ரேணுகா தான் மருத்துவம் படித்து தொழு நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதைத் தன் தந்தையிடம் கூறியுள்ளார். ராணுவ வீரராக இருந்த ரேணுகாவின் தந்தை, மகளின் உறுதி கண்டு மகிழ்ந்துபோனாராம்.
எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த ரேணுகா பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று பாண்டிச்சேரி ஜிப்மர் JIPMER கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்தார். மேலும் தொழு நோய் சிகிச்சைக் கான சிறப்பு படிப்பை முடித்து விட்டு முழுநேர சேவையில் இறங்கினார் டாக்டர் ரேணுகா. சென்னை சேத்துப் பட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் அவர். அப்போதே வரும் வருமானத்தில் ஏழை எளியவருக்கும் தொழுநோயாளிகளின் குடும்பத்திற்கும் அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார் ரேணுகா.
ரேணுகா ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டதால் ஜெர்மனி சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தாயின் விருப்பத்திற்கிணங்க ரேணு காவின் திரும ணம் நடந்தது. ‘நான் என் குறிக்கோளில் தெளிவாக இருந்தேன். தொழுநோயாளி களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் கணவரிடம் கூறி ஒப்புதல் பெற்றேன். நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். காரணம், என் கணவரின் குடும்பமும் என் விருப்பத்தை வரவேற்றது’ என மனம் மகிழ்கிறார் ரேணுகா. இன்றளவும் பல தொழுநோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் ரேணுகா.
உணர்ச்சியற்ற தேமல், கை கால்களில் உள்ள முடி உதிர்வு, காதுகளில் தடிப்பு, கைகள் உணர்ச்சியற்றுப் போதல் இவையாவும் தொழுநோயின் அறிகுறிகள் என்று கூறுகிறார் ரேணுகா. ‘இன்றளவும் புதிதாக ஒன்று, இரண்டு தொழுநோயாளிகள் வந்து கொண்டுதான் உள்ளனர். ஆனால் பயப்படத் தேவையில்லை. இந்நோயை உருவாக்கும் பாக்டீரியா ‘மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே’ ஆகும். இதில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உள்ளது. இதில் பாசிட்டிவ் உள்ளவர்கள் highly infective என அந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது WHO மல்டி ட்ரக் திறப்பி என்ற முறையை வெளியிட்டுள்ளது. இம்முறை மூலம் எம்மாதிரியான நோய்க்கும் இரண்டு வருடம் சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். மேலும் இப்பொழுது கை கால் முடக்கம் ஏற்படுவதில்லை. காரணம், தக்க முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.’ என அழகாக விளக்கம் தருகிறார் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்.
ரேணுகா பொது சேவையிலும் அதிக ஈடுபாடு உள்ளவராய் திகழ்கிறார். ‘நானும் என் கணவரும் இணைந்து ஒரு ட்ரஸ்டினை உருவாக்கி அதன் மூலம் திருவண்ணாமலை அருகில் உள்ள மாதிமங்கலம் என்னும் கிராமத்திற்கு ஒரு காவல் நிலையம் கட்டிக் கொடுத்தோம். மேலும் அந்தக் கிராமத்திற்குப் பேருந்து நிழற்குடை அமைத்துக் கொடுத்தோம். என் கணவர் படித்த பள்ளியில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் மேற்படிப்பு படிக்க வைக்கிறோம். இவையெல்லாம் எனக்கு மன நிம்மதி அளிக்கிறது. எங்கள் வீட்டில் எந்த ஒரு விேசஷமாக இருந்தாலும் நான் கோடம்பாக்கம் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் தான் கொண்டாடுகிறேன். அவர்கள் பேசும் வார்த்தைகள் மிக அழகானது. காரணம், அவர்கள் என்னைத் தன் மகளாகப் பாவித்து பேசுவார்கள்’ என்கிறார் டாக்டர் ரேணுகா.
HIV பாதித்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று பல பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கி அவர்களுடன் ஆடிப் பாடியுள்ளாராம் ரேணுகா. ‘அந்த நாள் அந்தக் குழந்தைகளின் சிரிப்பு மறக்கமுடியாதது’ என மெய்சிலிர்க்கிறார் ரேணுகா.
ரேணுகா வாட்ஸ்அப் குழுக்கள் மூலமும் தனது சேவையை செய்து வருகிறார். ‘ரத்ததானம் மற்றும் பிளாஸ்மா தானத்திற்காக கொடையாளிகளைக் கண்டு உணர்ந்து தக்க தேவையின் போது வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உதவி செய்கிறோம். மேலும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை பாரதி மூலம் 24 மணி நேரமும் முதியோர்கள் எங்களை அணுகலாம். அந்தக் குழுவில் மனநல மருத்துவர்களும் உள்ளனர். உணவிற்குப் பிறகு நிறைய முதியோர்கள் அந்த வாட்ஸப் குழுவின் மூலம் எங்களை அணுகுகிறார்கள். என் மருமகள் என்னை அடித்து விட்டாள், என் மகன் என்னை செருப்பால் அடித்தான், எனக்கு வாழப் பிடிக்கவில்லை எனப் பலரும் எங்களை அணுகுகிறார்கள். நாங்கள் அவர்களை மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஆறுதலாக அறிவுரை கூறி தேற்றி வருகிறோம்’ எனக் கூறுகிறார் ரேணுகா.
திருநங்கைகளுக்காகத் தனியாக இலவச மருத்துவம் அளித்து வருகிறார் ரேணுகா. ‘நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய நெருங்கிய தோழி திருநங்கையாக இருந்தார். திருநங்கை என்றால் என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. அவள் திடீரென்று யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். அவள் அம்மா ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார். அதில் முழுக்க முழுக்க என்னைப் பற்றியே எழுதி இருந்தது. ‘என்னை மன்னித்துவிடு! என்னால் பெண்ணாகவும் இருக்க முடியவில்லை. ஆணாகவும் இருக்க முடியவில்லை’ என எழுதி இருந்தாள். இந்நிகழ்வு என் மனதைப் பெரிய அளவில் பாதித்தது. இன்றளவும் நான் அவளைத் தேடி வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் அவளைப் பற்றி விசாரித்து வருகிறேன்.ஆனால் இன்றுவரை காணவில்லை’ என மனம் வருந்துகிறார் ரேணுகா.
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் டாக்டர் ரேணுகா. டாக்டர் முத்துலட்சுமி விருது, பொது சேவைக்கான விருது என அடுக்கிக்கொண்டே செல்லலாம் அவரது சாதனைகளை.
இன்றும் தொழுநோயாளிகளைத் தொட பலரும் மறுக்கின்றனர். தொழுநோயாளிகள் சிலர் தங்களைத் தாமே சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்துக் கொள்கின்றனர். அவர்களையெல்லாம் கண்டுணர்ந்து, அன்பால் அரவணைத்து, மனதில் நம்பிக்கையைக் கொடுத்து இலவச சிகிச்சையும் கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொடுக்கிறார் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன். அவரது 27 வருட சேவை இன்றும் தொடர்ந்து கொண்டே உள்ளது. ‘நான் இறக்கும் தறுவாயில் கூட ஒருவரின் உயிரைக் காக்க ரத்த கொடையாளியை வாட்ஸ்அப் குழு மூலம் தேடிக் கொண்டு இருப்பேன் என எண்ணுகிறேன்’ என அவர் கூறும்போது நம் மனம் ஏனோ பதைபதைக்கிறது .
ஒரு நிமிடம் கண்ணை மூடி டாக்டர் ரேணுகாவை எண்ணிப் பார்த்தால் அன்னை தெரசா நம் கண்முன்னே வந்துதான் செல்கின்றார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
– டாக்டர். ரேணுகா ராமகிருஷ்ணன்