என் தோழி அர்ச்சனா. அவள் பல ஆண்டுகளாக எனக்குப் பழக்கம். துறுதுறுப்பான பெண். படிப்பில் சுட்டி. தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பவள். அவளைச்சுற்றி இருப்பவர்களையும் அவ்வாறே மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைப்பவள். பொிய கனவுகளோடு பெற்றோர் பார்த்து முடிவு செய்த மணமகனை சாஸ்திர, சம்பிரதாயங்களோடு ஊர்கூட்டி திருமணம் செய்து கொண்டாள். திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாள். பின்பு ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலையும் பார்த்தாள்.
முதன்முதலாக ஒரு ஆணிடம் நெருங்கிப் பழகும் சூழலைத் திருமணம் உருவாக்கியிருந்தது. நல்ல நண்பனாக, கணவனாக, மனம் கவர்ந்த ஆணாக, அவன் மட்டுமே அவள் உலகம் என வாழ ஆரம்பித்திருந்தாள். அவர்களது இல்லற வாழ்க்கைக்குப் பரிசாக அடுத்த ஆண்டே ஒரு குழந்தை பிறந்தது. யாருடைய கண்பட்டதோ தொியவில்லை. இருவரது திருமண பந்தமும் பல்வேறு காரணங்களால் முடிவுக்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. திடீரெனத் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, மொத்தக் கதையையும் இரண்டு மணிநேர உரையாடலில் தொிவித்தாள். சிரித்து மகிழ்ந்த என் தோழி அழுது புலம்பினாள். இனி நான் வாழ முடியுமா? என் குழந்தைக்கு அப்பா இல்லை. இச்சமூகம் என்னை வாழ விடுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை என் முன் வைத்தாள்.
என் தோழிக்குச் சில அறிவுரைகள் வழங்கினேன். என்னை நேரில் சந்திக்க வரும்படி அழைத்தேன். ஒரே வாரத்தில் திருநெல்வேலியிலிருந்து என்னைக்காண வந்தாள். அவளைத்தேற்றி ஆறுதல் சொன்னேன். மணமுறிவுக்குப் பின்பும் வாழ்க்கை இருக்கிறது. நீ வாழ வேண்டியவள். உன் குழந்தை இப்புவியில் சாதிக்க நிறைய இருக்கிறது. உன் வாழ்க்கையை மீண்டும் துவக்க நான் உதவி செய்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுத்தேன்.
என்ன ஆச்சர்யம்! நான் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே விவாகரத்திற்குப்பின் மீண்டும் புத்துணர்வோடு வாழ ஆரம்பித்தாள். தனியாகக் குழந்தை வளர்ப்பது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது போன்ற சில சிக்கல்களை சந்திக்கும்போது என்னைத் தொலைபேசியில் அழைத்துப் புலம்புவாள். பேசி முடிக்கும் போதே உற்சாகம் அடைவாள்.
என் தோழியைப் போன்ற வாழ்க்கை உங்களுக்கும் இருக்கலாம். என்ன செய்வது என்ற குழப்பத்தில் நீங்களும் இருக்கலாம். வாழ்க்கை முடிந்துவிட்டதா என்ற கேள்வி மனமெங்கும் ஆக்கிரமித்து இருக்கலாம்.
தொடர்ச்சியாக இந்தப் பகுதியைப் படித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சில ஆலோசனைகளைப் தொடர்ந்து எழுதுகிறேன். புதிய வாழ்க்கை உங்களை வரவேற்கும் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் சந்திக்கிறேன்.
– ஜெமிலா