15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய 47ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்க்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தின் வெற்றியை தனதாக்கியது. இந்ததொடரில் கொல்கத்தாவுக்கு இது 4ஆவது வெற்றியாகும். கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 4 ஆட்டத்தில் வெற்றியும், 6 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி இதுவரை போட்டியிட்ட 10 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், நேற்றைய போட்டியுடன் சேர்த்து, இதுவரை கொல்கத்தா அணியுடன் ராஜஸ்தான் அணி 26 போட்டிகளில் நேருக்கு நேர் எதிர்க்கொண்டுள்ளது. அதில், 14 போட்டிகளில் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டையாகி உள்ளது. 10 போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிப்பெற்றுள்ளது. இதனாலே முன்னதாக கொல்கத்தாவே இந்தபோட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் இந்ததொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், ராஜஸ்தானிடம் முந்தைய ஆட்டங்களில் கண்ட தோல்விக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் இந்தபோட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.