கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரம் அருகே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த நபர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே வீழுந்தவர் மீது ஏறியது. இதனால், அந்தநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சூலூர் காவல்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, காவலர்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் காளியப்பன் என்ற 25 வயது இளைஞர் என்றும் இவர் கோயம்புத்தூர் கோவில்பாளையத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் விடுமுறை கேட்டு தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் நோக்கி பணிக்கு வந்துக்கொண்டு இருந்தபோது, சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை ஓட்டியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை பதரவைத்துள்ளது.