திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, விவசாயிகளின் வசதிக்காக ஒரத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் திருவாலங்காடு திமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஒரத்தூர் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் வராமல் இருக்க தடுத்து வருவதாக செல்லப்படுகிறது. மேலும், மகாலிங்கம் தான் வசிக்கும் சின்னமண்டலி கிராமத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் துணையுடன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தமிழழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.