பல பெண்கள் கருமுட்டைப்பை நீர்க்கட்டி என்ற நோயால் அவதிப்படுகின்றனர். இதில் அதிகளவு பாதிக்கப்படுவது திருமணமாகாத இளம் பெண்கள்தான். யாரைக் கேட்டாலும் மாதவிடாய்க் கோளாறு, மாதா மாதம் வரக்கூடிய மாதவிடாய் இரண்டுமாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வருகிறது என்ற குறையோடு இருப்பதை அதிகம் பார்க்க முடிகிறது.
இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது? இதைச் சாதாரணமாக விட்டுவிடலாமா என்பது குறித்து மகளிர் மருத்துவ நிபுணரைக் கேட்டபோது, பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பற்றிய விரிவான விளக்கத்தை அவர் கூறியதாவது;
மனித உடலில் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு ஸ்ட்ரோஜன், புரோஜஸ் புரோன் மற்றும் ஆண்ரோஜன் என்ற ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்கள் தேவையான அளவு சுரப்பு இருந்தால் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. இந்த ஹார்மோன்கள் அளவு மாறுபடும்போது கருமுட்டைப் பையில் (Ovary) பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனப்படுகின்ற நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன. இதனை நோய் எனச் சொல்வதைவிட ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance) என்றே சொல்வது சரி. சுருக்கமாக PCOS என்று அழைக்கலாம்.
முக்கியக் காரணமாக உணவுப் பழக்கமும், சிறிதளவும் உடற்பயிற்சியும் இல்லாத வாழ்க்கை முறையால் நமது உடல் எடை அதிகரித்து, ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து பலவித ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிப்பதாலும் பிசிஓஎஸ் ஏற்படலாம். சில நேரங்களில் மரபணுக்கள் மூலமாகவும் வரலாம்.
அதிக உடல் எடை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகளவு முடி உதிர்வு, முகத்தில் பரு, முகம், வயிறு, மார்பு பகுதிகளில் ரோம வளர்ச்சி போன்றவை இதற்கான அறிகுறிகள். இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் மகளிர் மருத்துவரை அணுகி, ஸ்கேன் பரிசோதனை மற்றும் ஹார்மோன் பரிசோதனை செய்தால் பாலி சிஸ்டிக் ஓவரிஸ் இருப்பதைக் கண்டறியலாம்.
மேலும் இந்தப்பிரச்னையை எளிதாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் இப்பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் 40 சதவீதம் பேருக்குக் குழந்தையின்மை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படாமல் போதும்போது கருப்பையின் உட்சுவரின் அடர்த்தி அதிகரிக்கும். காலப்போக்கில் இது கருப்பை புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது.
பருவ வயதுப்பெண்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் எடை அதிகமாக இருப்பார்கள். மாதவிடாய் சரியாக வராது. முடி கொட்டும், உடலில் முடி வளரும், எடையைக் குறைத்து 3 முதல் 6 மாதங்கள் மாத்திரை எடுத்துக்கொண்டால் சரியாகும். குழந்தை இல்லாத பெண்கள் கருமுட்டை வளர்ச்சிக்கான மாத்திரைகள், ஊசிகள் மூலம் சரிப்படுத்தலாம்.
நடுத்தர வயதுப்பெண்களில் குண்டாக இருப்பதும், மாதவிடாய் கோளாறு இருப்பதும் இதன் அறிகுறிகளாக இருக்கும். மாதவிடாய் சரியாக வர மாத்திரை, மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்வதும் நல்லது.
பி சி ஓ எஸ் இருப்பதை ஆரம்பத்தில் கண்டறிந்து சரிசெய்துகொள்வது நல்லது. அதிகளவு பாதிப்பு இருக்கும்போதுதான் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
– டாக்டர்.சந்தோஷி
மகப்பேறு மருத்துவர்