உதகை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் தர்மலிங்கம். இவர் அதேகல்லூரியில் ஆங்கில துறையில் பணியாற்றும் பெண் உதவி பேராசிரியையிடம் கடந்த சில மாதங்களாகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். தர்மலிங்கம், தமிழ் பேரசிரியையை நேரில் பார்க்கும்போதெல்லாம் தகாத வார்த்தைகள் கூறி பாலியல் அத்துமீறல் செய்வது வழக்கம். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பேராசிரியை பல முறை கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. பெண் பேராசிரியை பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் கல்லூரி நிர்வாகம் அலட்சியத்தோடு நடந்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, உதவி பேராசிரியர் அந்த கல்லூரி மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி கிடைக்க பெண் பேராசிரியை முயற்சித்துள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், மண்டல இயக்குநர் கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பாலியல் அத்துமீறல் விவகாரம் விஸ்வரூபமாகி, இந்த வழக்கிற்காக சிறப்பு DSPயை நியமித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தமிழ் உதவி பேராசிரியர் தர்மலிங்கம், பெண் பேராசிரியையிடம் பாலியல் அத்துமீறம் நோக்கத்தில் பேசியது உறுதியானது. இதைத்தொடர்ந்து தர்மலிங்கம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் உதவி பேராசிரியர் தர்மலிங்கம் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக தற்போது அரசு கலை கல்லூரி முதல்வர், கல்லூரியில் சாதி, மத பேதம் பார்ப்பதில்லை என்று கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்கள், பேராசிரியைகளிடம் நிர்பந்தமாக கையெழுத்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் கையெழுத்திட மறுத்து வருகின்றனர். கல்லூரி முதல்வர் குற்றஞ்சாட்டப்பட்ட தர்மலிங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என கல்லூரியில் பணிபுரியும் மற்ற பேராசிரியர்கள் தெரிவித்துவருகின்றன்ர்.