ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டேர் லியேன் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான பொறுப்பேற்ற பிறகு உர்சுலாவின் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்தபயணத்தில், இந்திய-ஐரோப்பா இடையேயான உறவு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தையை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து நடத்த உள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிற அரசு சார் உயர் அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார். முன்னதாக 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரைசினா டயலாக் என்ற மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு புவிசார் அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் பற்றி இந்தியா முன்னெடுக்கும் மாநாடாகும். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டேர் லியேன் அழைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் இவர் உரையற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.