த.மா.காவின் தலைமைக் கழகச் செயலாளர் வெங்கடேசனின் தந்தை ராஜபாண்டியன் படத்திறப்பு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இராஜபாண்டியன் திருவுருவ படத்தை, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, ‘எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர், சிறந்த முதலமைச்சராக இருந்தார். அவர், முதலமைச்சராக இருந்தபோது சாதாரணமாக இருந்தார். எளிமைக்குச் சொந்தக்காரர் அவர்தான். அவரின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம். தவிர அவருடன் அங்கம்வகித்த அமைச்சர்கள் தேனீக்கள் போன்று சுறுசுறுப்பானவர்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்காக மக்கள் காத்திருக்கின்றனர்’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டினார்.