இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து மேற்கத்திய வங்காளதேசம் வரை நீண்டிருக்கிறது சுந்தர்வன காடுகள். இங்கு இந்தியாவின் சிறப்பு அடையாளங்களுள் ஒன்றான வங்காளப்புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீரில் நீந்தி உயிர்வாழும் தன்மை உள்ள இந்த புலிகள் உலகில் வேறு எங்கும் காணப்படாத புலி இனமாக உள்ளது. எனவே இவை வாழும் இடம் பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புலிகள் அடர்காடுகளை விட்டு வெளியேறுவதும் அதனை இந்திய வனத்துறை அதிகாரிகள் மீட்டு, மீண்டும் சுந்தரவன காடுகளில் விடுவிப்பதும் வழக்கமான ஒரு செயல்முறை. அந்தவகையில் ஒரு புலியை காட்டுக்குள் விடுவிப்பதற்காக அழைத்து சென்ற போது, அந்த புலி படகில் இருந்து ஒரேதாவாக தண்ணீரில் குதித்தது. இந்த பழைய வீடியோவை இந்திய வனத்துறையை சேர்ந்த பர்வீன் கஸ்வான் என்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, லைஃப் ஆஃப் பை திரைப்படத்தில் இடம்பெற்ற பெங்கால் புலியின் டைவ் காட்சியை நினைவுபடுத்துகிறது.