தமிழகத்தில் அகழாய்வு மூலம் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு அவை, தொல்லியல்துறை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மானாமதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில், அங்குள்ள அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல் சமீபத்தில், கீழடி கொந்தகையில் ஒரே குழியின் அருகருகே 6 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொல்லியல்துறை கல்லூரி மாணவியான கவிபாரதி, விடுமுறையில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் தோட்டத்திற்குச் சென்றபோது அங்கு முதுமக்கள் தாழி இருப்பதைக் கண்டு, தனது கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அவற்றை பாதுகாக்க தனது கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்ன மாணவிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.