இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு நாளுக்குநாள் நிலைமை மோசமாகிவருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. இறக்குமதி பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர். அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இலங்கையின் இந்த நிலையைக் கருத்தில்கொண்டு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டிவருகின்றன. இந்தியாவிடம்கூட கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக அந்நாட்டு நிதியமைச்சர் பிரதமர் மோடியை வந்து சந்தித்துப் பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. அதன்படி, டீசல், அரிசி உள்ளிட்ட பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பிவருகிறது. ஆனால், இவையனைத்தும் போதுமானதாக இல்லை. தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து, இலங்கை அரசு மீண்டும் இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, இலங்கை கேட்கும் கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தம்மால் முயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முயற்சிக்கும்’ என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.