ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இளையராஜாவின் இந்த கருத்தின் மீது பல மாறுபட்ட விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தநிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, “தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதையை இப்படி இழிவு செய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது. இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.