2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. அதனையடுத்து, ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த பி.எட் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், தேர்வுக்கு 12ஆம் தேதி காலை வரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்ப அவகாசம் நிறைவடைய இருந்த 13ஆம் தேதி, இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்ட போது, ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து, TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிப்பு செய்திட வலியுறுத்தி பலதரப்பினராலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கொடுவை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டுக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.