இந்திய பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், நாளை குஜராத் செல்லயிருக்கும் அவர், 20ம் தேதி வரை அம்மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கிடையே மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து அவர், இன்று இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார். இவர்களது வருகைக்குப்பின் ஏப்ரல் 19ம் தேதி, மொரீஷியஸ் பிரதமர் பிரவீன் குமார் ஜெகநாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ராஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் முன்னிலையில், ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக வரும் 21ம் தேதி இந்தியா வர உள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் முதல்நாளாக குஜராத் செல்லும் பொரிஸ் ஜான்சன், பயணத்தின் இரண்டாவது நாளான 22ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.