தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கோடைவெயிலைச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த பலருக்கும் இந்த மழை, சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. அதேநேரத்தில் நெல்லையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கோடைமழையின் காரணமாக அனைத்து பகுதியிலும் தண்ணீர் தேங்கி தக்காளி அழுகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், இன்று வேதாரண்யம் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்கு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்குவதால் எள், சணப்பைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 2 சிறார்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். தவிர, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. மேலும், போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் புகுந்தது. இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.